இந்தியா

கிரண்பேடியிடம் கடும் வாக்குவாதம் நடத்திய அதிமுக எம்எல்ஏ - பரபர வீடியோ

rajakannan

புதுச்சேரியில் அரசு விழாவில் ஆளுநர் கிரண்பேடிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.வுக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அறிவிக்கும் நிகழ்ச்சிக்கு உப்பளம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவ்விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள் மற்றும் உப்பளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

மேடையில் பேசிய அன்பழகன், தனது தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என பட்டியலிட்டு பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் கிரண்பேடி, பேச்சை நிறுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். இதனை பொருட்படுத்தாமல் அன்பழகன் தொடர்ந்து பேசியதால் ஆத்திரமடைந்த கிரண்பேடி, அவரின் மைக்கை ஆஃப் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இருவருக்கும் இடையே மேடையிலேயே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இதனையடுத்து விழாவில் இருந்து அன்பழகன் பாதியிலேயே வெளியேறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன், “ஆளுநருக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது? இது அநாகரீகத்தின் உச்சகட்டம்” என்று கூறினார் அதேபோல், அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பேசும் போது நாகரீகமாகவும், குறித்த நேரத்திலும் பேசுதல் வேண்டும் என்றும் அதையே அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகனுக்கு தாம் கூறியதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ‌விளக்கம் அளித்துள்ளார்.