அமித்ஷா - இபிஎஸ்  முகநூல்
இந்தியா

அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சா ? - இபிஎஸ் பரபரப்பு பதில்!

இன்று சென்னை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து அமித் ஷாவுடனான சந்திப்பிற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

நேற்றைய தினம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், அதிமுக மூத்த தலைவர்கள்
முனுசாமி, தம்பிதுரை, வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்த சந்திப்பு இரவு 10.30 மணியளவில் நிறைவடைந்தது. இச்சந்திப்பிற்கிடையில் சுமார் 15 நிமிடங்களுக்கு, அமித் ஷா -  எடப்பாடி பழனிசாமி இருவர் மட்டும் தனியாக பேசியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அமித் ஷா - இபிஎஸ் இடையிலான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, எக்ஸ் வலைத்தளத்தில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில்
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்றும், ஆட்சி அமைந்தபிறகு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

இந்த சூழலில்தான், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா? என்று பலரும் சந்தேக கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில், இன்று சென்னை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து சந்திப்பிற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

அதில், ” தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது; அப்படி மேற்கொண்டால் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும்.

மேகதாது இடையே அணைக்கட்ட கூடாது. தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை முழுமையாக விசாரிக்க கோரியும் வலியுறுத்தினோம். தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள் பிரச்சினைகள் குறித்தும் அமித்ஷாவிடம் தெரிவித்தோம். அதிமுக அலுவலகத்தை பார்வையிடவே வந்தேன். நேரம் கிடைத்தால் அவரை பார்க்கலாம் என்று இருந்தோம். அதன்படி, நேரம் ஒதுக்கப்பட்டதும் 45 நிமிடம் ஒவ்வொரு பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்து அவரிடம் பேசினோம். கூட்டணி என்று எதுவும் கிடையாது. இது முழுக்க முழுக்க மக்களின் பிரச்னை குறித்து தெரிவிப்பதற்கான சந்திப்பு.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும். தேர்தல் நேரத்தில் என்ன சூழ்நிலை இருக்குதோ, அதை பொறுத்தே கூட்டணி மாறும். கூட்டணி இருக்கு இல்லை என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காணும் கட்சி அதிமுக.” என்று தெரிவித்துள்ளார் .