இந்தியா

அதிமுக- காங்கிரஸ் இடையே மக்களவையில் கடும் மோதல்

Rasus

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபால் குற்றம்சாட்டியதால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபால், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நரேந்திர மோடி அரசுக்கும், பாஜகவுக்கும் ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல மக்களைவை உறுப்பினர்களும் வேணுகோபாலுக்கு ஆதரவாக பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அரசு மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுவதாக கூறினார். நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் மத்திய அரசு அதிமுகவுடன் கூட்டு வைத்துள்ளதாக கூறிய அவர், அவையை முடக்க அதிமுகவை தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டினார். வேணுகோபால் குற்றச்சாட்டுக்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆவேசமாக பதிலடி அளித்தனர். இதனால் மக்களவைக்குள் கடும் சலசலப்பு ஏற்பட்டது.

இன்றுடன் 16-ஆவது நாளாக நாடாளுமன்ற இரண்டு அவைகளும் முடங்கி உள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாகத்தில் இதுவரை ஒரு நாள் கூட அவைகள் செயல்படவில்லை இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி விடுமுறை அறிவிக்கப்படலாம் என்பதால், நாளை மட்டுமே மக்களவை, மாநிலங்களவை செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.