உத்தரகாண்ட் மாநிலத்தில் போலி இடஒதுக்கீடு சான்றிதழ்கள் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் சார்ந்தோருக்கான ஒதுக்கீட்டை துஷ்பிரயோகம் செய்த மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.
போலி இடஒதுக்கீடு சான்றிதழ்கள் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த குற்றச்சாட்டின் பேரில், உத்தரகாண்ட் அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணையை அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கும் விரிவாக்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். போலி சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தராகண்ட் மாநிலத்தில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் (MBBS) இடங்களைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 'சுதந்திரப் போராட்ட வீரர்களின் சார்ந்திருப்போர்' (Freedom Fighter Dependent) சான்றிதழ்களில் தீவிரமான குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்து.
அதாவது நான்கு மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு இடஒதுக்கீடு சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து மாநில ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான ஆவண சரிபார்ப்பின் போது, சான்றிதழ்களில் முறையான பதிவுகள் இல்லாததும், முகவரிகள் போலியானவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 4 மாணவிகள் மற்றும் ஒரு பெற்றோர் உட்பட 5 பேர் மீது டேராடூன் காவல்துறையினர் குற்றவியல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தசூழலில் இதன் நீட்சியாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தற்போது 8 மாணவர்கள் போலி இட ஒதுக்கீடு சான்றிதழ் மூலம் மருத்துவ சேர்க்கை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதற்குபின்னால் ஏதேனும் பெரிய நெட்வொர்க் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.