இந்தியா

சிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே ?

jagadeesh

மகாராஷ்டிராவில் வரும் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், சிவசேனா கட்சியின் கோட்டையாக கருதப்படும் மும்பையில் உள்ள வொர்லி சட்டமன்ற தொகுதியில் அக்கட்சி நிறுவனர் பால் தாக்கரேயின் பேரனும் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே போட்டியிடுகிறார். தாக்கரே குடும்பத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடும் முதல் நபரான ஆதித்ய தாக்கரே தொண்டர்கள் படை சூழ ஆட்டம், பாட்டம் என ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை கடந்த 1966-ஆம் ஆண்டு பால்தாக்கரே தொடங்கினார். மண்ணின் மைந்தர் கோட்பாட்டுடன் கட்சியை ஆரம்பித்து வழிநடத்திய அவர் தேர்தலில் போட்டியிட்டதில்லை. எந்த அரசு பதவியும் வகித்தது இல்லை. பால் தாக்கரேயின் மறைவுக்கு பின் சிவசேனாவின் தலைமை பொறுப்பேற்ற அவரது மகன் உத்தவ் தாக்கரேயும் தந்தை வழியில் கட்சி பொறுப்புகளை மட்டுமே வகித்து வருகிறார். இதுவரை அவரும் தேர்தல் களத்தில் இறங்கியது இல்லை. இந்த நிலையில், சிவசேனாவின் மூன்றாம் தலைமுறை தலைவரான ஆதித்ய தாக்கரே, தேர்தலில் போட்டியிடுகிறார். தாக்கரே குடும்பத்தில் இருந்து தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் தலைவர் என்ற சிறப்பை ஆதித்ய தாக்கரே பெற்றுள்ளார்.

1990ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி மும்பையில் ஆதித்ய தாக்ரே பிறந்தார். பி.ஏ வரலாறு பட்டம் பெற்ற இவர், சட்டமும் பயின்றார். எழுத்துப் பணியில் அதிகம் ஆர்வம் கொண்ட ஆதித்ய தாக்ரே MY THOUGHTS IN WHITE AND BLACK என்ற பெயரில் கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். கட்சி தொடர்பான விமர்சனம் எழுதும் பத்திரிகை, ஊடகங்களுக்கு ஆதித்ய தாக்கரேவே நேரடியாக பதில் கடிதம் எழுதுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியல் பயணத்தை தொடங்கிய ஆதித்ய தாக்கரே, சிவசேனாவின் யுவ சேனா எனப்படும் இளைஞர் அணியின் தலைவராக பொறுப்பேற்றார். 2017ஆம் ஆண்டு மும்பை மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவராக தேர்வானார். இதையடுத்து சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவராக ஆதித்ய தாக்கரே உயர்ந்தார்.