online game
online game twitter
இந்தியா

ஒருநாளைக்கு 15 மணி நேரம்... 6 மாதம் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

Prakash J

ராஜஸ்தானின் அல்வாரைச் சேர்ந்த 15 வயது நிரம்பிய சிறுவன், அங்குள்ள பள்ளியொன்றில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஒரு ரிக்‌ஷா தொழிலாளி; தாயார் வீட்டு வேலை செய்பவர். இப்படியான குடும்பச் சூழலைக் கொண்ட அவர், ஸ்மார்ட்போனில் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் (ஃப்ரீ ஃபயர் மற்றும் போர் ராயல் கேம்) ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும், அந்தச் சிறுவன் ஒருநாளைக்கு 15 மணி நேரம் எனத் தொடர்ந்து 6 மாதங்கள் விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் தன்னுடைய உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளைக்கூட மறந்து விளையாட்டிலேயே மூழ்கியுள்ளார்.

Video Games

அவருடைய இந்தச் செயல் பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு அவரது பெற்றோர்கள் முயன்றபோதும், தோல்வியிலேயே முடிந்துள்ளது. அதன் விளைவு, அந்த சிறுவன் தற்போது தூக்கத்தில், ‘நெருப்பு... நெருப்பு’ என்று முணுமுணுக்கிறாராம். மேலும், அந்தச் சமயத்தில் அவரது கைகள் நடுங்குவதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, இந்தச் செயல் அவரின் ஆன்லைன் விளையாட்டை நினைவுப்படுத்துவதாக இருக்கிறதாம். இதனால் பயந்துபோன அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருடைய மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.

மனநல மருத்துவர்கள் அடங்கிய குழு, தற்போது சிறுவனுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. அவர்களின் பராமரிப்பில் அவர் முன்னேற்றம் காணத் தொடங்கியுள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளை அதிகமாக விளையாடியதன் விளைவுதான் சிறுவனக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.