இந்தியா

நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி - ஆளுநர் அழைப்பு

Rasus

நாகாலாந்தில் பாஜக கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.  

நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாகாலாந்தில் மொத்தமாக 60 தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 31 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும்.

தேர்தலில் நாகா மக்கள் முன்னணி 27 இடங்கள் பெற்றபோதிலும் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு 18 இடங்களும், அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுக்கு 12 இடங்களும் தேர்தலில் கிடைத்திருந்தன. ஆட்சி அமைக்க மேலும் ஒரு எம்.எல்.ஏ தேவை என்ற நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், மொத்தமாக 32 எம்எல்ஏக்களின் ஆதரவுடன், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைமையில் நாகாலாந்தில் ஆட்சி அமைகிறது.

தங்களுக்கு ஆதரவு உள்ளாக 32 எம்எல்ஏக்களின் பெயர்களுடன் தன்னை ஆட்சியமைக்கு அழைக்குமாறு தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் நெபியூ ரியோ ஆளுநர் பிபி ஆச்சார்யாவை சந்தித்தார். இதனையடுத்து ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெபியூ ரியோவிடம் இருப்பதாகவும், அவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் ஆளுநர் பி.பி.ஆச்சார்யா அழைப்பு விடுத்துள்ளார். இதனால், பாஜக கூட்டணி ஆட்சி நாகாலாந்தில் அமைகிறது.