இந்தியா

அதானி குழும பங்குகளின் விலை உயர்வால் களைகட்டிய பங்குச்சந்தை - காரணம் இதுதான்!

webteam

மும்பை பங்குச் சந்தையில், இன்று பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.5 லட்சம் கோடியாக உயர்ந்தது.

அதானி குழுமத்தில் முதலீடு போன்றவற்றால், இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.5 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த இரண்டு நாட்களில், சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அதானி பங்குகள் NRIக்கு சொந்தமான எஃப்ஐஐ மூலம் ரூ.15,000 கோடி பூஸ்டர் ஷாட்டைப் பெற்ற பிறகு, பட்டியலிடப்பட்ட அனைத்து பங்குகளின் மொத்த சந்தை மூலதனமாக தலால் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களை ரூ.5.5 லட்சம் கோடி பணக்காரர்களாக ஆக்கியுள்ளது.

சென்செக்ஸ் 70000ஐ தொடும்!

இதற்கிடையே , Axis My India வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், அடுத்த 3 மாதங்களில் சென்செக்ஸ் 70,000 ஐத் தாண்டிவிடும் எனச் சொல்லப்படுகிறது. 43% மக்கள் இவ்வாறு சொல்லியிருப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது. 25% மக்கள், சென்செக்ஸ் 55,000 முதல் 65,000 வரை இருக்கும் என்றும், 18% மக்கள் 50,000க்கும் கீழே குறையும் என்றும் சொல்லியிருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் 4 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் GQG பார்ட்னர்ஸ் நிறுவனத்தால், கடந்த 5 நாட்களாக அதானி குழும பங்குகள் உயர்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. GQG பார்ட்னர்ஸ் நிறுவனம், அதானி குழுமத்தின் மீது ரூ.15,446 கோடி முதலீடு செய்துள்ளது.

10 பங்குகளில் 8 பங்குகள் உயர்வு

இன்றைய அதானி நிறுவனங்களின் 10 பங்குகளில் 8 பங்குகள் உயர்வுடன் முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதானி குழுமமும் முன்கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்துவோம் எனக் கூறியிருப்பதும் பங்கு உயர்வுக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இன்று தேசியப் பங்குச் சந்தை மட்டுமின்றி, ஆசிய பங்குச் சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகமாகின.

ஜப்பானின் நிக்கேய் 1%க்கு மேலும், ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு 0.2% மேலும், ஆஸ்திரேலிய சந்தை 0.6% உயர்வைச் சந்தித்தன. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் அதிகரித்து 81.92 ஆக இருந்தது.