mumbai dharavi  ANI
இந்தியா

இனி கதை முடிஞ்சுது..? அதானி கையில் தாராவி.. வெளியேற்றப்படும் தமிழர்கள்!

தாராவியில் வாழும் குடும்பங்களில் 2000-ம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் கொண்டவர்களுக்கு மட்டுமே அங்கு, 350 சதுர அடி இலவச வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

மும்பையின் மையப்பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மறுசீரமைக்கும் மாபெரும் திட்டத்தை அதானி குழுமம் கைப்பற்றியிருப்பதன் மூலம் தமிழர்களுக்குச் சிக்கல் எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் மையப்பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மறுசீரமைக்கும் திட்டத்தை மாநில அரசு கையிலெடுத்துள்ளது. இதற்காக மாநில அரசுடன் இணைந்துள்ள அதானி குழுமம், ‘தாராவ் மறுசீரமைப்பு திட்ட பிரைவேட் லிமிடெட்’ (DRPPL) என்ற சிறப்பு நிறுவனத்தை அமைத்துள்ளது. இதில் அதானி குழுமத்திற்கு 80% பங்குகளும், மகாராஷ்டிர அரசுக்கு 20% பங்குகளும் உள்ளன. சுமார் ₹5,069 கோடி ஏலத்தொகையுடன் இத்திட்டத்தைக் கைப்பற்றிய அதானி குழுமம், தகுதியான குடும்பங்களுக்காக மாதுங்காவில் (Matunga) உள்ள 22 ஏக்கர் ரயில்வே நிலத்தில் 10,432 மறுவாழ்வுக் குடியிருப்புகளைக் கட்டும் பணிகளை அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதில், தலா 37 முதல் 39 தளங்கள் கொண்ட 10 அடுக்குமாடிக் கோபுரங்கள் கட்டப்படவுள்ளன. மேலும், உள்ளூர் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் 1,379 வணிக மற்றும் தொழிற்கூடங்களும் அமைக்கப்பட இருக்கின்றன.

mumbai dharavi

அதேநேரத்தில், தகுதியான மக்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது போக மீதமுள்ள நிலப்பரப்பில் மிக விலையுயர்ந்த வணிக மற்றும் சொகுசு குடியிருப்பு வளாகங்களை உருவாக்குவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என அதானி குழுமம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தாராவியில் வாழும் குடும்பங்களில் 2000-ம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் கொண்டவர்களுக்கு மட்டுமே அங்கு, 350 சதுர அடி இலவச வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியேற்றப்படும் லட்சக்கணக்கான தகுதியற்ற குடும்பங்களை முலுண்ட், குர்லா மற்றும் உப்பு நிலப் பகுதிகளுக்கு மாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

மேலும், தோல் பதனிடுதல், மண்பாண்டத் தொழில், ஆடை வடிவமைப்பு மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி போன்ற சுமார் $1 பில்லியன் டாலர் மதிப்பிலான முறைசாரா தொழிற்துறைகள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் இயங்க முடியாது என்பதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.தவிர, அதானி குழுமத்திற்கு ஆதரவாக டெண்டர் விதிகள் மாற்றப்பட்டதாகவும், டி.டி.ஆர் கொள்கையில் சாதகமான திருத்தங்கள் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி தொடர் ஆர்ப்பாட்டங்களையும் நீதிமன்ற வழக்குகளையும் முன்னெடுத்து வருகின்றன.

mumbai dharavi

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தாராவியில் வசிக்கும் தமிழர்களில் பெரும் பகுதியினர் சொந்த வீடுகள் இல்லாமல் வாடகைக்கு குடியிருப்பவர்களாகவும், குறுகிய 10x10 அறைகளின் மேல் தளங்களில் வசிப்பவர்களாகவும் உள்ளனர். தற்போதைய மறுசீரமைப்பு விதிகளின்படி, தரைத்தளக் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதால், வாடகைக்கு வசிக்கும் தொழிலாள குடும்பங்கள் முற்றிலும் வெளியேற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், மக்கள் வெவ்வேறு பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டால், மும்பையில் தமிழர்களின் தனித்துவ அடையாளமாக விளங்கும் இந்த சமூகக் கட்டமைப்பு மற்றும் தமிழ் வழிக் கல்விச் சூழல் முழுமையாகச் சிதறும் அபாயம் உள்ளது.