அதானி குழுமத்திற்கு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற விதிமுறைகளுக்கு புறம்பாக கோடை விடுமுறை காலத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் அதானி குழுமத்திற்கு தொடர்பான வழக்குகள் கோடைக்கால விடுமுறை அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்குகள் கோடைக்கால அமர்வின் விதிமுறைகளுக்கு புறம்பாக விசாரிக்கப்பட்டதாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “முதலில் பர்சா கெண்டா கொலியரிஸ் லிமிடெட் vs ராஜஸ்தான் விதியூத் நிகாம் லிமிடெட் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வில் விசாரிக்கப்படும் என்று ஏப்ரல் 8ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. அதேபோல மே 8ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வில் விசாரிக்கப்படும் வழக்குகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதில் இந்த வழக்கு 441ஆவது வழக்காக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் விசாரிக்கப்படும் தேதி குறிப்பிடாமல் மே மாதத்தில் விசாரணை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த வழக்கு கடந்த மே மாதம் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அடுத்த நாள் இந்த வழக்கின் விசாரணை முடிந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு மே 27ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற பொது அமர்வு விசாரிக்காமல் ஏன் கோடைக்கால அமர்வு விசாரித்தது. மேலும் இந்த வழக்கில் எந்தவித அவசரமும் இல்லாத போது ஏன் இவ்வளவு விரைவாக விசாரிக்கப்பட்டது.
அதேபோல இரண்டாவதாக, அதானி பவர் லிமிடெட் vs குஜராத் மின்சார ஒழுங்கு ஆணையம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் எம்.ஆர்.ஷா கொண்ட கோடைக்கால அமர்வில் விசாரணைக்கு எடுக்க முறையிடப்பட்டது. இவர்கள் இந்த வழக்கின் விசாரணையை மே 24ஆம் தேதிக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி இந்த வழக்கு மே 24ஆம் தேதி விசாரிக்கப்பட்டது.
ஏற்கெனவே இந்த வழக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் ஏ.எம்.சப்ரே கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் இந்த வழக்கின் விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதனையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை.
இந்தச் சூழலில் இந்த வழக்கு எவ்வாறு உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வில் விசாரிக்கப்பட்டது? ஏனென்றால் இந்த வழக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி வெளிவந்த சுற்றறிக்கையில் இல்லை. ஆகவே இது எப்படி விசாரணைக்கு எடுக்கப்பட்டது” என்ற கேள்விகளை தனது கடிதத்தில் எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த விவகாரங்களில் நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்காமல் அவர் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட முறை குறித்து கேள்வி எழுப்புவதாக துஷ்யந்த் தவே தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.