சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பது ஸ்கேன் எடுத்ததில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சிறையிலிருந்த சசிகலாவுக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் நேற்று மாலை பரப்பன அக்ரஹார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பவ்ரிங் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு 2 மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், பொது வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவருக்கு ரேபிட் மற்றும் ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா நெகட்டிவ் என முடிவு வெளியானது. இருப்பினும், அவரது உடல்நிலை குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கை வெளியிடவில்லை, சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக பவ்ரிங் அரசு மருத்துவமனையிலிருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டார். அப்போது, வீல் சேரில் வெளியே அழைத்து வரப்பட்ட சசிகலா, அங்கு திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.
இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பது சி.டி.ஸ்கேனில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நுரையீரல் நிபுணர் பிரசன்னகுமார் தாமஸ், “தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாலே கூடுதல் கவனத்துடன் சிகிச்சை தேவைப்படுவதாக பொருள். குறியீடு 10க்கு மேல் இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது, ஆக்ஸிஜன் தேவைப்படும்” என்றார்.