இந்தியா

''ஒரு அடி நீரில் ஒருவர் தானாக மூழ்க வாய்ப்பே இல்லை'' - ஸ்ரீதேவி இறப்பு குறித்து பரபரப்பை ஏற்படுத்திய கேரள டிஜிபி

webteam

நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக கேரள டிஜிபி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற ஸ்ரீதேவி ஹோட்டலில் தங்கியிருந்த போது குளியல் தொட்டியில் தவறி விழுந்து 2018ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உயிரிழந்தார். அவரின் இறப்பு பலராலும் சந்தேகிக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் ஸ்ரீதேவி உயிரிழந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் அவரின் இறப்பு குறித்து  டிஜிபி ரிஷிராஜ் சிங் பேசியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவி நிச்சயம் கொலை செய்யப்பட்டிருக்கவே வாய்ப்பிருப்பதாக தன் நண்பனான தடயவியல் நிபுணர் டாக்டர் உமாநாதன் தன்னிடம் தெரிவித்ததாக டிஜிபி கூறியுள்ளார். 

இது குறித்து கேரளகவ்முதி நாளிதழுக்கு பேசியுள்ள டிஜிபி ரிஷிராஜ் சிங், ''என் நண்பனான உமாநாதன் தடயவியல் நிபுணர். பல நாட்களுக்கு முன்பு அவர் ஸ்ரீதேவி மரணம் குறித்து என்னிடம் பேசினார். இது நிச்சயம் கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்தார். 

ஒருவர் எவ்வளவு போதையில் இருந்தாலும், ஒரு அடி தண்ணீரில் மூழ்க வாய்ப்பில்லை என்றும், அதே சமயம் ஒருவர் காலைப்பிடிக்க மற்றொருவர் தலையில் தண்ணீரில் மூழ்கடித்தால் மட்டுமே ஒருவர் உயிரிழக்க முடியும் என்றும் நண்பன் கூறியதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

தடயவியல் நிபுணரான தன்னுடைய நண்பன் குறித்து நாளிதழுக்கு அளித்த சிறப்புப்பேட்டியில் இந்த கருத்தை டிஜிபி தெரிவித்துள்ளார். தடயவியல் நிபுணரான உமாநாதன் தற்போது உயிரோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.