கர்நாடக அரசு சார்பில் ஒரே நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் ‘மகா திருமண’ திட்டத்தின் விளம்பர தூதர்களாக நடிகர் யஷ் - ராதிகா தம்பதி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
கர்நாடக அரசின் அறநிலையத்துறை சார்பில் திருமண நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில், ‘மகா திருமண’ திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டத்தின் படி சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டும் ஏப்ரல் 26 மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் இந்த திருமணங்கள் நடைபெறும் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தின்போது அரசு சார்பில் மணப்பெண்ணுக்கு ‘மாங்கல்யா’ திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கமும், திருமண ஜோடிகளுக்கு ரூ.15,000 ரொக்கமும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருமணங்களை ஆண்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருவாய் வரும் 100 கோயில்களை தேர்வு செய்து, அதில் நடத்துவதற்கு அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. ஏனென்றால் அந்த கோயில்களின் மூலம் வரும் வருவாயை இந்த திட்டத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘மகா’ திருமண திட்டத்தின் விளம்பர தூதர்களாக கர்நாடக நடிகர் யஷ் - ராதிகா தம்பதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு யஷ் - ராதிகா ஆகிய இருவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கர்நாடக அறநிலையத்துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் புஜாரி தெரிவித்துள்ளார். கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த யஷ், தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த திட்டம் தொடர்பாக விளம்பரம் செய்ய, இன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி, நடிகர் புனீத் ராஜ்குமார் மற்றும் ஆன்மீகவாதி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.