ரஜினி, யோகி ஆதித்யநாத்
ரஜினி, யோகி ஆதித்யநாத் ani
இந்தியா

உத்தரப்பிரதேச முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கும் ரஜினி? செய்தியாளர் கேள்விக்கு கலகல பதில்!

Prakash J

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 9ஆம் தேதி இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரம், பத்ரிநாத் கோயில், உத்தரகாண்ட் வியாசர் குகை, துவாரஹட்டில் உள்ள பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று தியானம் செய்தார்.

இமயமலை பயணத்திலிருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். பின்னர், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை லக்னோவில் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் சந்தித்தார்.

இந்த நிலையில், லக்னோவில் இன்று (ஆகஸ்ட் 19) ரஜினிகாந்திடம் ஏ.என்.ஐ. செய்தியாளர் ஒருசில கேள்விகளை வைத்தார். அதற்கு ரஜினியும் மகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். அதன்படி லக்னோவில் ரஜினி காரைவிட்டு இறங்கிவிட்டு வருகிறார். அப்போது செய்தியாளர், “சார் ஒரேயொரு சின்ன பேட்டி” என்கிறார். அதற்கு ரஜினி, “என்ன பேட்டி கொடுக்க வேண்டும், கேளுங்கள்” என்கிறார்.

இதையடுத்து செய்தியாளர், “அயோத்தி ராமர் கோயில் போறீங்களா?” என்கிறார். அதற்கு ரஜினி, “ஆமாம். நாளைக்கு அங்கே செல்கிறேன்” என்றவரிடம், ”லக்னோவில் உங்களுடைய ரசிகர்கள் எல்லாரும் உங்களைப் பார்க்க ஆவலாய் உள்ளனர்” எனச் செய்தியாளர் சொல்ல, அதற்கு ரஜினி, “ஆமாம்... ஆமாம்” என்கிறார்.

தொடர்ந்து அவரிடம் “உத்தரப் பிரதேச முதல்வரைச் சந்திக்கப் போகிறீர்களா? அவரிடம் என்ன கோரிக்கை வைக்கப் போகிறீர்கள்? உங்களுடைய படத்துக்கு Tax பற்றிப் பேசுவீர்களா?” எனச் செய்தியாளர் கேட்கிறார். அதற்கு ரஜினி, “இல்லை... இல்லை. வெறும் படத்தை மட்டும் பார்க்கச் சொல்லுவேன்” என்கிறார்.

இறுதியாகச் செய்தியாளர், “உங்கள் படத்துக்கு நல்ல விமர்சனம் வந்திருக்கிறது” என்று சொல்ல, அதற்கு ரஜினி, “நன்றி.. நன்றி” எனச் சிரித்தபடியே சொல்லிவிட்டு நகர்கிறார்.