காசா போருக்கு மோடியும் காரணம் என்று பிரகாஷ்ராஜ் பேச்சு pt
இந்தியா

”காசா போருக்கு மோடியும் ஒரு காரணம்” - நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்தக் கோரி "பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்" சென்னை எழும்பூரில் பேரணியில் ஈடுபட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

PT WEB

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக., தலைவர் திருமாவளவன், சிபிஐ மூத்தத் தலைவர் முத்தரசன், சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹுருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, கி.ராம்கிருட்டிணன் நெல்லை முபாரக், தனியரசு, கருணாஸ், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட 31 பெரியாரிய உணர்வளர்கள் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்கள், திரை கலைஞர்கள் பங்கேற்று தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

சத்யராஜ்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ், “விஞ்ஞானம் என்பவது மக்களின் வளர்ச்சிகாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கொலைக்காரப்பாவிகள் காசாவில் இனப்படுகொலை செய்து வருகின்றனர்.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான். ஆனால் இஸ்ரேலியர்கள் இன்னும் மனிதனாக வளரவில்லை. வளர்ந்து வரும்போது பாதியிலியே நின்று விட்டான்.

சென்னையில் கூட்டம் நடத்தினால், போர் நிற்குமா? நிற்கும். இன்றுள்ள சமூகவலைதளங்கள் உலக அளவில் இதை எடுத்துச் செல்லும்.

சினிமாவில் நாங்கள் சம்பாதிக்கிறோம். பிரபலமடைந்திருக்கிறோம். ஆனால் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கவில்லை என்றால் பிரபலமானவராக இருந்து ஒரு ம*ருக்கும் பிரோஜனம் கிடையாது” என்று பேசினார்.

நடிகர் தீனா

நடிகர் தீனா பேசுகையில், மனித நேயத்தை காக்க நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். ஏற்கனவே இலங்கையில் நடந்த படுகொலை பற்றி அனைவருக்கும் தெரியும். அதனால் காசாப்போரை நிறுத்த வேண்டும். எந்த நாட்டில் எந்த மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், போர் முடிஞ்சிரும். தலைவர்களெல்லாம் கைகுலுக்கி கிளம்பிவிடுவார்கள். ஒரு கிழவி தன் மகனுக்கு காத்திருப்பார். ஒரு மனைவி தன் கணவனுக்காக காத்திருப்பார். ஒரு மகன்/மகள் தங்களின் அப்பாவுக்காக காத்திருப்பார்கள்.

"என் கவிதைகளில் பறவைகளின் சத்தம் கேட்கவேண்டும். பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும் என்றால்  யுத்த விமானங்களின் சத்தம் அடங்க வேண்டும்."

இந்த போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமல்ல. அதற்கு ஆதராவாக இருக்கும் அமெரிக்காவும், எதிர்த்த்து குரல் கொடுக்காத மோடியும் காரணம் என்று பேசினார்.

நடிகர் வெற்றிமாறன்

நடிகர் வெற்றிமாறன் பேசுகையில், “பாலஸ்தீனில் நடப்பது திட்டமிட்ட படுகொலை. ஆதாரமாக இருக்கும் ஆலிவ் மரங்களை அழிக்கிறார்கள்.

இன்று காசா பஞ்சப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சம் என்றால் 5-ல் ஒருவர் பசியால் மடிவது. இந்த திட்டமிட்ட படுகொலையை கண்டிப்பது நம் அனைவரின் கடமை. எனது கடமை; எனது உரிமை” என்று பேசினார்.

வி.சி.க. தலைவர் திருமாவளவன்

வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசுகையில், “இஸ்ரேல் சியோனிசத்தை கண்டிக்கிறோம். யாசர் அராஃபத் தலைமையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பல ஆண்டுகள் போராடி தனக்கென ஒரு இடத்தை மீட்டெடுத்தாலும் அது இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் உள்ளது.

பிரிட்டிஸ் அரசாங்கம் இஸ்ரேலை உருவாக்கினார்கள்.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, சிங்களத்துக்கும் தமிழகர்களுக்கும் நடக்கும் பிரச்சனையாக இருந்தாலும் சரி, பாலஸ்தீனதுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையான இருந்தாலும் சரி பிரிட்டிஷ் பின்னணியில் இருந்துவருகிறது.

உலகத்திலேயே மக்கள் அடர்த்தி அதிகமுள்ள இடம் காசா என்ற நகரம். ஈழத்தில் LTTE என்ற ஆயுதம் தாங்கிய இயக்கம் தோன்றியதோ? அப்படி தான் ஹமாஸ் என்ற இயக்கம் பாலஸ்தீனில் தோன்றியது. எப்படி LTTE அமைப்பை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கராவாத அமைப்பு என்று கூறியதோ? அதுபோல ஹமாஸையும் பயங்கரவாத இயக்கம் என்று சொல்கின்றனர். அல்கொய்தா போல...

அமெரிக்கா போன்ற நாடுகளின் மனித உரிமைகள் குறித்து வாய்க்கிழிய பேசுபவர்கள் ஏராளாமாக உள்ளனர். ஆனால், பாலஸ்தீனில் நடப்பதை பற்றி அங்கு யாரும் வாய் திறக்கவில்லை.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை இப்போது வரை யாரும் இனப்படுகொலை என்று ஒப்புக்கொள்ளவில்லை. போர் குற்றங்கள் என்று UNO சொல்லி வருகிறது.

இங்கேயாவது (காசா) அவர்கள் இனப்படுகொலை செய்வதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆட்சியாளர்கள் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள்; அரசுகள் ஒன்று சேர்ந்து விடுகின்றது. 

Genocide என்றால் ஒருத்தனின் பரம்பரையை மொத்தமாக அழிப்பது. ஒரு இனத்தின் அடுத்த தலைமுறை இல்லாமல் அழிப்பது. இற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து நாம் கடந்து செல்ல முடியாது” என்று பேசியுள்ளார்.