இந்தியா

உ.பி: தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில் காங்கிரஸ் தலைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

JustinDurai

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகரும் காங்கிரஸ் தலைவருமான ராஜ் பப்பருக்கு 2 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியில் மூத்த தலைவராக இருப்பவர் ராஜ் பப்பர். இவர் பல பாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஆவார். கடந்த 1996ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது நடிகர் ராஜ் பப்பர், உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் தேர்தல் அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதாகவும் அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் ராஜ் பப்பர் மீது மே 2, 1996 அன்று வாஜிர்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை லக்னோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ராஜ் பப்பரின் குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து  தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிக்கலாம்: ₹7 லட்சம் வேணுமா? ஜெயிலுக்கு போறியா? மும்பைவாசிக்கு செக் வைத்த சைபர் போலீஸ்; ஏன் தெரியுமா?