actor nana patekar
actor nana patekar  PT
இந்தியா

’நாட்டிற்கே உணவு கொடுக்கும் விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க அரசுக்கு நேரமில்லை’ - ’காலா’ பட நடிகர்!

PT WEB

’காலா’ படத்தில் நடித்திருந்த நானா படேகர், தன் கருத்துகளை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவதில் பெயர் பெற்றவர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சி குறித்து கட்சிகளைச் சாடிய அவர், நேற்று ’விவசாயிகள் அனைவரும் அரசாங்கத்திடம் எதையும் கோர வேண்டாம்’ என்று வலியுறுத்தி உள்ளார்.

மகாராஷ்டிராவின் வறட்சிப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் ’நாம்’ என்ற அறக்கட்டளையை நடிகர் மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து நடத்திவரும் படேகர், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பட்டேகர் விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்கவில்லை என்ற விமர்சனங்களை முன் வைத்தார்.

அப்போது அவர், “தங்கம் விலை உயரும்போது, ​​அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால், அவர்களின் குறைகளைத் தீர்க்க அரசுக்கு நேரமில்லை.

அப்படிப்பட்ட அரசிடம் விவசாயிகள் எதையும் கோரக் கூடாது. விவசாயிகள், நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டுவர வேண்டும். எந்த அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். இளம் தலைமுறைக்கு நீங்கள் என்ன மாதிரியான லட்சியத்தை முன்வைக்கிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ எனக் கேள்வி எழுப்பிய அவர், ’என்னால் அரசியலில் சேர முடியாது’ எனவும், ’விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம், தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழில் ஆடுகளம், பொல்லாதவன், விசாரணை, ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு, ஹரிதாஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் கிஷோர் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நியாமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதாரவிலை (MSP) வழங்குவதை உறுதி செய்து ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளைகூட விட்டுவிடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை உண்டு வாழும் இந்த பக்தர்கள்கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?

விவசாயிகள் போராட்டத்தின்போது களத்தில் சாலைகள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொருபக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் தலையில் தேசவிரோதி என்ற முத்திரை உள்ளது.

விவசாயிகள் முதலில், மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குகளினால் தைரியமடைந்து, தங்களுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.