இந்தியா

மோசடி நபருடன் மோகன்லாலுக்கு தொடர்பு? - ரூ.10 கோடி பணமோசடி வழக்கில் விரைவில் விசாரணை!

ச. முத்துகிருஷ்ணன்

பணமோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மோகன்லாலிடம் அமலாக்கத்துறை அடுத்த வாரம் விசாரணை நடத்தவுள்ளது.

பழங்கால பொருட்களை விற்பனை செய்வதில் மோசடியில் ஈடுபட்ட மான்சன் மவுன்கல் தொடர்பான பணமோசடி வழக்கு விசாரணை மலையாள நடிகர் மோகன்லாலை அடுத்த வாரம் அமலாக்கத்துறை கொச்சி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பல ஆண்டுகளாக கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை சேகரிப்பவர் போல் பணியாற்றி வந்துள்ளார் 52 வயதான யூடியூபர் மான்சன் மவுன்கல். கடந்த ஆண்டு செப்டம்பரில் போலி பழங்கால பொருட்களை விற்பனை செய்து 10 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கேரள மாநில போலீசாரால் மோன்சன் கைது செய்யப்பட்டார்.

திப்பு சுல்தானின் சிம்மாசனம், மோசஸின் பணியாரம், ஔரங்கசீப்பின் மோதிரம், சத்ரபதி சிவாஜியின் பகவத் கீதை நகல், புனித அந்தோணியின் விரல் நகம் மற்றும் பிற அரிய பொருட்கள் இருப்பதாகவும் மான்சன் மவுன்கல் கூறியுள்ளார். ஆனால் அவை அனைத்தும் போலியானவை என்று அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லால் மோசடிப் புகாரில் கைதாகியுள்ள மோன்சனின் கேரள இல்லத்திற்கு ஒருமுறை சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் ஏன் அங்கு சென்றார் என்ற காரணம் தெரியவில்லை. மோன்சனிடம் இருந்து நடிகர் மோகன்லாலும் சில பொருட்களை வாங்கியதால், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.