ncert, மாதவன் எக்ஸ் தளம்
இந்தியா

முகலாயர்கள், டெல்லி சுல்தான்கள் பாடம் நீக்கம்.. NCERTஐச் சாடிய நடிகர் மாதவன்!

முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் பாடப் பகுதிகள் நீக்கப்பட்டதற்கு நடிகர் ஆர்.மாதவனும் கருத்து தெரிவித்துள்ளார்.

Prakash J

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அடிக்கடி பாடத் திட்டம் நீக்கம் சம்பந்தமாகச் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் NCERT, 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாறு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அவற்றிற்குப் பதிலாக, மகதம், மௌரியர்கள், சாதவாகனர்கள் மற்றும் சுங்கர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சங்களைப் பற்றிய புதிய அத்தியாயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியாண்ட், பாகம்-1' என்ற தலைப்பிலான புதிய சமூக அறிவியல் புத்தகம், உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் சமீபத்தில் நடந்த மகா கும்பமேளா மற்றும் மேக் இன் இந்தியா மற்றும் பேட்டி பச்சாவ்-பேட்டி பதாவோ போன்ற மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ncert,

'பூமி எவ்வாறு புனிதமாகிறது' என்ற அத்தியாயம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து மதங்களாலும் புனிதமாகக் கருதப்படும் இடங்கள் மற்றும் புனித யாத்திரைகள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் 12 ஜோதிர்லிங்கங்கள், சார்தாம் யாத்திரை மற்றும் சக்திபீடங்கள் உள்ளிட்ட புனிதமான புவியியல் இடங்களின் விவரங்கள் அடங்கும். இதேபோல், ஜனபதா, சாம்ராஜ், ஆதிராஜா, ராஜாதிராஜா போன்ற சமஸ்கிருத வார்த்தைகள் பல்வேறு அத்தியாயங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் பாடப் பகுதிகள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வகையில், நடிகர் ஆர்.மாதவனும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “இதைச் சொல்வதால் எனக்குப் பிரச்னை வரலாம். ஆனாலும், நான் அதைச் சொல்வேன். பள்ளியில் நான் வரலாறு படித்தபோது, ​​முகலாயர்களைப் பற்றி எட்டு அத்தியாயங்களும், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரிகங்களைப் பற்றி இரண்டு அத்தியாயங்களும், பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி நான்கு அத்தியாயங்களும், தெற்கு இராஜ்ஜியங்களான சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் சேரர்கள் பற்றி ஒரேயோரு அத்தியாயமும் இருந்தன. முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இணைந்து 800 ஆண்டுகள் ஆட்சி செய்ததைப் போலல்லாமல் சோழப் பேரரசு 2,400 ஆண்டுகள் பழைமையானது. அவர்கள், கடல் பயணம் மற்றும் கடற்படை சக்தியின் முன்னோடிகளாக இருந்தனர். ரோம் வரை நீண்டிருந்த நறுமணப் பொருள் வழித்தடங்களை அவர்கள் கொண்டிருந்தனர். நமது வரலாற்றின் அந்தப் பகுதி எங்கே?

நடிகர் மாதவன்

நமது வலிமைமிக்க கடற்படைப் படைகளுடன் அங்கோர் வாட் வரை கோயில்களைக் கட்டுவது பற்றிய குறிப்பு எங்கே? சமண மதம், பௌத்தம் மற்றும் இந்து மதம் சீனாவிற்கு பரவியது. கொரியாவில் உள்ள மக்கள் பாதி தமிழ் பேசுகிறார்கள். ஏனென்றால் நமது மொழி அந்த அளவுக்கு எட்டியுள்ளது. இவை அனைத்தையும் ஒரே ஒரு அத்தியாயத்தில் தொகுத்துள்ளோம்" எனத் தெரிவித்த அவர், ”உலகின் பழைமையான நம் தமிழ் மொழி ஏன் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து அவர், "இது யாருடைய கதை? பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது? தமிழ் உலகின் பழைமையான மொழி. ஆனால், அதைப் பற்றி யாருக்கும் தெரியாது. நமது கலாசாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு இப்போது கேலி செய்யப்படுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.