நடிகர் திலீப்பிற்கு, பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் ஜூலை 10ஆம் தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். 85 நாட்களாக கொச்சி ஆலுவா சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். திலீப்பின் ஜாமீன் மனுவை கொச்சி அங்கமாலி நீதிமன்றம் 2 முறையும், கேரள உயர்நீதிமன்றம், இதற்கு முன் இரண்டு முறையும் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி நடிகர் திலீப் கேரள உயர்நீதிமன்றத்தை நாடினார். அதில், இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்க வேண்டும் என திலீப் தரப்பில் வாதிடப்பட்டது. அதையடுத்து கொச்சி அங்கமாலி நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், ஒரு லட்சம் ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும், 2 பேர் ஜாமீன் வழங்க வேண்டும், சாட்சிகளை சந்திக்க கூடாது, விசாரணை அதிகாரிகள் அழைக்கும் போதெல்லாம் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகள் அடிப்படையில் திலீப்பிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.