இந்தியா

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அதிரடி திருப்பம் - நள்ளிரவில் நடந்தது என்ன..?

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அதிரடி திருப்பம் - நள்ளிரவில் நடந்தது என்ன..?

webteam

மகாரா‌‌ஷ்டிராவில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட ‌‌பாஜக‌‌‌‌‌ - சிவசேனா கூட்டணி, தேர்தல் முடிவுக்குப் பிறகு முறிந்தது. இதையடுத்து, தேசியவாத ‌‌காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து‌ ஆட்சி அமைக்‌க‌ தீவிரம் காட்டி வந்தது சிவசேனா.‌‌ இந்த புதிய கூட்டணிக்கு ‌காங்கிரஸ் ‌தலை‌வர் சோனியா காந்தியும் ஒப்புதல் அளித்‌ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என நேற்று இரவு 8 மணிக்கு தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத்பவார் தெரிவித்தார். அடுத்த நாள் 3 கட்சிகளும் இணைந்து ஆளுநரை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் திடீரென இன்று காலை மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் ஆட்சி அமைக்கிறார். துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்கிறார். அப்படி நள்ளிரவில் என்னதான் நடந்தது? 

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என சரத்பவார் அறிவித்ததையடுத்து 9 மணிக்கு அஜித் பவார் மற்றும் பட்னாவிஸ் இணைவது குறித்து உறுதி செய்யப்படுகிறது. அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது, 11 மணிக்கு பட்னாவிஸ் டெல்லியில் இருந்த அமித்ஷாவிடம் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து அமித்ஷா, மோடி ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில் அனைத்துக்கும் ஒப்புதல்களும் வழங்கப்பட்டு ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்படுகிறது. 11.55 மணிக்கு விடிந்ததும் பதவி ஏற்பு என்று முடிவான நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு குடியரசு தலைவர் ஆட்சியை நீக்கும் பரிந்துரையை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்புகிறார். 

அதிகாலை 2 மணிக்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு அவசர காலங்களில் மட்டும் பயன்படுத்தும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த முடிவு எடுக்கின்றனர். அதாவது அமைச்சரவையைக் கூட்டாமலேயே குடியரசு தலைவர் ஆட்சியை நீக்கும் பரிந்துரை தயாராகிறது. 

4.30 மணிக்கு உள்துறை செயலாளர் அலுவலகம் மூலம் குடியரசு தலைவருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு 5.10 மணிக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. 5.30 மணிக்கு பட்னாவிஸ், அஜித் பவார் ஆளுநர் மாளிகை வருகின்றார்கள். 5.47 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கிய மத்திய அரசின் அரசாணை வெளியாகிறது. 

6 மணிக்கு ஏ.என்.ஐ. செய்தி நிறுவன ஊழியர்கள் மட்டும் ரகசியமாக ஆளுநர் மாளிகைக்கு அழைக்கப்படுகிறார்கள். 7.50 மணிக்கு பதவி ஏற்பு விழா நடத்தப்படுகிறது. பதவி ஏற்பு முடிந்த பின்னர் தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பாகிறது. 8.40 மணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி வெளியிடுகிறார்.