இந்தியா

முத்தலாக் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை : மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

முத்தலாக் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை : மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

webteam

முத்தலாக் நடைமுறையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த‌ தீர்ப்பை அமல்படுத்துவதை உறுதி செய்யும்படி அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

முத்தலாக் வழக்கம், முஸ்லிம்களிடையே நிலவி வருகிறது. இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்கக்கோரி, 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7 பேர் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் முத்தலாக் நடைமுறைக்கு ஆறு மாதம் தடை விதித்து தீர்ப்பளித்தனர். இதனை செயல்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களை அறிவுறுத்தவுள்ளதாக, உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கையும் மத்திய அரசு சார்பாக விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரத் தேவையில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே, பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறையை விசாரிக்க தனிச் சட்டங்கள் உள்ளதாகவும், இந்தச் சட்டங்களே போதுமானது என்றும் அவர் தெரிவித்தார்.