தமிழக-கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியில் ஆயுதங்களுடன் புகுந்த மாவோயிஸ்டுகள் உணவுப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டி, கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திருநெல்லி பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது மளிகை கிடைக்கு சீருடை மற்றும் ஆயுதங்களுடன் வந்த 2 பெண்கள் உட்பட 5 மாவோயிஸ்டுகள் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிய பின்னர், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவான நோட்டீஸ்களை ஒட்டிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அவர்கள் ஒட்டிய நோட்டீஸ்களில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக போராடுபவர்களை ஒடுக்க நினைக்கும் அரசை கண்டிப்பதாகவும், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவான வாசகங்களும் இடம்பெற்றுள்ளது.
அதேபோல இரவு 8 மணி அளவில் வயநாடு மாவட்ட வைத்திரி பகுதியில் வசிக்கும் அண்ணன் கேளு என்பவரது வீட்டிற்கு சீருடை மற்றும் ஆயுதங்களுடன் வந்த 5 மாவோயிஸ்டுகள் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி சென்றுள்ளனர். இந்த தகவலை அறிந்தவுடன் கேரள அதிரடிபடையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர். தமிழக - கேரளா எல்லையில் உள்ள தமிழக சோதனை சாவடிகளில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்லைப் பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.