இந்தியா

”மங்களூருவில் நடந்தது விபத்தல்ல.. பயங்கரவாத தாக்குதல்” - கர்நாடக DGP அறிவிப்பால் பரபரப்பு!

JananiGovindhan

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கங்கநாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரோடி பகுதியில் உள்ள உள்வட்ட சாலையில், நேற்று (நவ.,19) மாலை சென்று கொண்டிருந்த ஆட்டோவில் பயணியின் பையிலிருந்த பார்சல் ஒன்று திடீரென வெடித்து சிதறி அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது.

இதில் ஆட்டோ ஓட்டுநரும், ஆட்டோவில் சென்ற பயணியும் படுகாயமடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தி வந்தனர்.

அதன்படி, விபத்துக்குள்ளான ஆட்டோவில் இருந்து குக்கரும் பேட்டரிகளும் கைப்பற்றப்பட்டதால், வெடிமருந்து இருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் பேரில் சந்தேகித்து காவல்துறை தீவிர விசாரணையை முடுக்கிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், மங்களூருவில் நடந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதலுக்கானதுதான் என கர்நாடக மாநில DGP பிரவீன் சூட் ட்விட்டரில் பதிவிட்டு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், “கடுமையான சேதம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக மாநில காவல்துறையும், மத்திய அரசு தரப்பிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன” எனக் கூறியுள்ளார் பிரவீன் சூட்.

ஆட்டோ குண்டு வெடிப்பில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஓட்டுநரும் பயணியும் குணமானதும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, மத்திய புலனாய்வுக் குழுக்கள் கர்நாடக போலீசுக்கு உதவுவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடந்த இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் எதிரொலியாக தமிழக - கர்நாடக எல்லைப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், சோதனைச் சாவடிகளிலும், கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.