இந்தியா

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணம் - மத்திய அரசு உத்தரவு

JustinDurai
உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தபடி கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை தொற்றுக்கு ஆளாகி சுமார் நான்கரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு குறித்து அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு வெளியிட்டு, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், கொரோனாவால் உயிரிழந்ததாக சான்றளிக்கப்பட்டிருந்தால் அவரது குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மட்டுமே நிதி வழங்க வேண்டும் எனவும், கொரோனா பரவிய நாளில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.