இந்தியா

கர்நாடகா: வளர் இளம் பருவ பெண்களில் 50% பேருக்கு இரத்த சோகை!

EllusamyKarthik

மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று இந்திய நாட்டு மக்களின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து குறித்த ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிட்டார். முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள இந்த கணக்கெடுப்பில் 17 மாநிலங்களும், 5 யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றுள்ளன. 

மீதமுள்ள 12 மாநிலங்கள் (தமிழகம் உட்பட) மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கான களப்பணிகள் கொரோனாவினால் தடைபட்டுள்ளதால் வரும் 2021 இல் இரண்டாம் கட்டமாக அந்த கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 - 16 இல் வெளியிடப்பட்ட நான்காவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பை காட்டிலும் தாய் சேய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கிய நலனில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் வளர் இளம் பருவ பெண்களில் சுமார் 50% பேருக்கு இரத்த சோகை இருப்பதாக இந்த  கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியாக அந்த மாநிலத்தில் 49.4% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை வெளியிடப்பட்ட கணக்கெடுப்பை காட்டிலும் 4.1 சதவிகிதம் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிரசவத்தின் போது குழந்தை இறப்பதும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கமும் கடந்த முறையை காட்டிலும் 7 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதே போல கர்நாடகாவில் உடல் பருமன் தொடர்பான சிக்கலில் ஆண் மற்றும் பெண் என இருபாலினத்தை சேர்ந்தவர்களும் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தேசிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான சிக்கல்களும் கடந்த முறையை காட்டிலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.