இந்தியா

தாயகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் தவித்து வரும் 200 இந்திய மாணவர்கள்..!

webteam

தாயகம் திரும்ப முடியாமல் தமிழர்கள் உள்பட இந்திய மாணவர்கள் சுமார் 200 பேர் கோலாலம்பூரில் சிக்கித் தவிக்கிறனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜரோப்பிய நாடுகள், சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து அந்நாடுகளுக்கும் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அங்கு மருத்துவம் படித்துவரும் இந்திய மாணவ - மாணவிகள் 200 பேர் வெளியேறியுள்ளனர். இந்தியா வருவதற்காக தமிழக மாணவர்கள் உள்பட அனைவரும் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்துள்ளனர்.

ஆனால் மலேசியாவில் இருந்து இந்தியா திரும்ப விமான சேவை இல்லாததால் மாணவர்கள் அனைவரும் அங்கு தவித்து வருகின்றனர். தங்களை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே மலேசியாவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் இருந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். விமான சேவை இல்லாததால் அவர்கள் விமான நிலையத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் டெல்லியில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் திருச்சி விமான நிலையத்திலும் மலேசியாவை சேர்ந்த தமிழர்கள் அவதிக்கு ஆளாகினர்.