இந்தியா

பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் சிலை

webteam

பாகிஸ்தான், கராச்சி அருங்காட்சியகம் ஒன்றில் இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனின் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார். அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்தபோது துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் வசம் அவர் சிக்கினார். இதையடுத்து, அவரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனால், தன்னால் எதுவும் சொல்ல முடியாது என அவர் கூறிவிட்டார். அத்துடன், அபிநந்தன் காபி குடிப்பது போன்று வீடியோ ஒன்றையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. 

இதன்பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அவரை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. இதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய அபிநந்தன் காயத்திலிருந்து குணமடைய சிகிச்சை பெற்று வந்தார். சில வாரங்களுக்கு முன்புதான் அவர் மீண்டும் விமானத்தை இயக்க விமானப்படை ஒப்புதல் அளித்தது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள விமானப்படையில் அவர் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், அபிநந்தன் பிடிபட்ட நேரத்திலிருந்த அவரது தோற்றத்தைப் பிரதிபலிக்கும் விதமாக, பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் சிலையை அந்நாட்டின் வான்வெளிப் படைக் காட்சிக்கு வைத்துள்ளது. அதனுடன் அவர் காபி குடித்த குவளையையும், அவர் சென்ற விமான பாகங்களையும் காட்சிக்கு வைத்துள்ளது.