வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட அபிநந்தனுடன், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் வசமுள்ள வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து இந்திய அரசும் பாகிஸ்தானிடம் வலியுறுத்தியது. நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.
இந்நிலையில், விமானப்படை வீரர் அபிநந்தனை அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கைகளை இந்திய தூதர் மேற்கொண்டார். பின்னர், பாகிஸ்தானின் ராவல் பிண்டி ராணுவ முகாமிலிருந்து லாகூருக்கு அபிநந்தன் கொண்டு வரப்பட்டார். இதனிடையே, அபிநந்தனை லாகூரிலிருந்து வாகாவிற்கு தனி விமானத்தில் கொண்டுவரக் கோரிய இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது. இதற்கிடையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் அபிநந்தனை விடுவிக்கக்கூடாது எனத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சாலை மார்க்கமாக காரில் கொண்டுவரப்பட்ட அபிநந்தன் மாலை 4 மணியளவில் வாகா எல்லை வந்தடைந்தார். ஒப்படைப்பக்கப்படும் போது மேற்கொள்ளப்படும் பாகிஸ்தான் அதிகாரிகளின் நடைமுறைகள் நடைபெற்று 5 மணியளவில் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.
ஒப்படைக்கும் தருணத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுடன் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் புகைப்படை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, அவருடன் பாகிஸ்தான் வீரர் ஒன்றாக டீ அருந்தினர். மேலும், அபிநந்தனுக்கு அவர்கள் பரிசுகள் வழங்கியதாக தெரிகிறது. அவரது பிஸ்டல் உள்ளிட்டவை ஒப்படைக்கப்பட்டன.