அபிஜீத் திப்கே Reuters
இந்தியா

ஒரு வருடத்திற்கு போராட மாட்டோமா? அப்படி நாங்கள் கையெழுத்திடவில்லை! அபிஜீத் திப்கே அதிரடி பதிவு!

அபிஜீத் திப்கே உட்பட கரப்பான் ஜனதா கட்சி தலைவர்கள் ஒரு வருடத்திற்கு எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகே விடுவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு அபிஜீத் திப்கே மறுப்பு தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

கரப்பான் கட்சி தலைவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஒரு வருடத்திற்கு அமைதியை காக்கும் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடவில்லை என அபிஜீத் திப்கே எக்ஸ் தளத்தில் மறுப்பு தெரிவித்தார். போராட்டம் தொடரும் என அவர் உறுதியளித்தார்.

டெல்லி காவல்துறையினரால் முன்னெச்சரிக்கை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே மற்றும் முக்கிய தலைவர்களான அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகிய மூன்று பேரும் சுமார் 24 மணி நேரத்திற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டனர். டெல்லி கேன்டோன்மென்ட் காவல் நிலையத்தின் சிறப்பு நிர்வாக மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இவர்கள் மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Delhi CJP Protest

இந்தசூழலில் அடுத்த ஒரு வருட காலத்திற்கு அமைதியை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கை அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது என்ற உறுமொழிப் பத்திரத்தின் அடிப்படையில் தான் கரப்பான் கட்சி தலைவர்கள் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்பட்டது.

அதாவது, “அடுத்த ஒரு ஆண்டிற்கு அமைதியையும் நன்னடத்தையும் பேணுவதற்காக ரூ.50,000 பிணைத் தொகைக்கான பிணைப் பத்திரம் பெறப்பட்டு, மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்” என காவல்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்தசூழலில் தான் இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் அபிஜீத் திப்கே பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், “நாங்கள் போராட்டம் நடத்த மாட்டோம் என்று கூறும் எந்தப் பத்திரத்திலும் கையெழுத்திடவில்லை. நாங்கள் மீண்டும் வீதிகளில் இறங்குவோம்” என பதிவிட்டுள்ளார்.