மோடி அரசின் அடக்குமுறைக்கு எதிராக அபிஜீத் திப்கே கடும் விமர்சனம். சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக போர் தொடுக்கும் பாசிச சர்வாதிகாரி என மோடியை குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நீட் முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் நடத்தப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் வெற்றி பெற்றது. தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இந்தச் சம்பவம் முடிவடைந்த சில மாதங்களிலேயே, SIR என அழைக்கப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்தசூழலில் தான் கரப்பான் ஜனதா கட்சி சார்பில் தலைமை தேர்தல் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்த டெல்லியில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்தப்போராட்டத்தை தடுக்க 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரை பாதுகாப்பிற்காக டெல்லியில் மத்திய அரசு நிறுத்தியது. அதுமட்டுமில்லாமல் முன்னெச்சரிக்கை காரணமாக அபிஜீத் திப்கே உள்ளிட்ட CJP தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மேலும் கூட்டம் கூடாமல் இருக்க பல அதிரடியான செயல்களில் போலீஸார் ஈடுபட்டனர்.
இந்தசூழலில் தான் மத்திய அரசின் மோசமான அடக்குமுறைக்கு எதிராக பதிவிட்டிருக்கும் அபிஜீத் திப்கே, “உங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் போர் தொடுக்கிறீர்கள். நீங்கள் யார் என்பதை இந்த நாட்டுக்குத் தெளிவாகக் காட்டுகிறீர்கள். நீங்கள் ஒரு பாசிச சர்வாதிகாரி மோடி” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு பதிவில் “இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட டெல்லி காவல்துறையால் தாக்கப்படுகிறார்கள். ஞானேஷ் குமார் என்ற ஒருவரை மட்டும் பாதுகாப்பதற்காக அனைவருடனும் போர் தொடுக்கத் தயாராகும் அளவிற்கு, அவர் மோடிக்கு அப்படி என்ன முக்கியமானவராக உள்ளார்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.