இந்தியா

ஆரே பகுதியில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஆரே பகுதியில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

webteam

மும்பையின் ஆரே பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து இன்று விசாரிக்கிறது.

மெட்ரோ ரயில் நிர்வாகம் வாகன நிறுத்தம் அமைப்பதற்காக மும்பையின் ஆரே பகுதியில் உள்ள 2,600 மரங்களை வெட்ட முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மரங்களை வெட்டுவதற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் மரங்களை வெட்டுவதற்காக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் முயன்றபோது, ஆரே பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி டெல்லியை சேர்ந்த சட்ட மாணவர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்தக் கடிதத்தை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை ஏற்று நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு அமர்வு முன், இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே ஆரே பகுதியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி கைதான 29 பேருக்கு மும்பை உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.