இந்தியா

சண்டிகர் மாநகராட்சி தேர்தல்: முதல் தேர்தலிலேயே ஆம் ஆத்மி அபாரம்; பாஜகவுக்கு சறுக்கல்?

சண்டிகர் மாநகராட்சி தேர்தல்: முதல் தேர்தலிலேயே ஆம் ஆத்மி அபாரம்; பாஜகவுக்கு சறுக்கல்?

JustinDurai
சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 35 வார்டுகளில் 14 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.
சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் மொத்தமுள்ள 35 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது மாநகராட்சியை கையில் வைத்துள்ள பாஜக 12 வார்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக சார்பில் தற்போது மேயராக உள்ள ரவி காந்த் சர்மா இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், ''பஞ்சாபில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கு இது உதாரணம். ஊழல் அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். ஊழலற்ற ஆம் ஆத்மியைத் தேர்வு செய்துள்ளனர். பஞ்சாப் மாற்றத்திற்குத் தயாராகி விட்டது'' என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சதா கூறுகையில், ''பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டம்தான் இது. முழுப்படத்தையும் பஞ்சாப் தேர்தலில் பார்ப்பீர்கள்'' என்றார்.
வழக்கமாக சண்டிகரில் காங்கிரஸ், பாஜக இடையேதான் போட்டி நிலவும். ஆனால் தனது முதல் தேர்தலிலேயே அக்கட்சிகளை தடுமாற வைத்துவிட்டது ஆம் ஆத்மி. இந்த தேர்தல் முடிவுகள் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலிலும் எதிரொலித்தால் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்படலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
 கடந்த முறை நடந்த சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள, 26 வார்டுகளில் பாஜக 20 இடங்களை கைப்பற்றியது. கூட்டணிக் கட்சியான அகாலி தளம் ஒரு இடத்தில் வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.