தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருப்பதுடன், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளிடம் போட்டி நிலவுகிறது. தவிர, ஒவ்வொரு கட்சிகளும் இதர கட்சிகளைக் குறைகூறி வருவதுடன், மறுபக்கம் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முழுவதும் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற கான்வாய் மீது பாஜக தாக்குதல் நடத்தியதாக ஆம்ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
பிரசாரத்தின்போது அரவிந்த் கெஜ்ரிவால் கார் அருகே சில நபர்கள் கருப்புக் கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், அந்த கார் மீது ஒரு கல் எறியப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு, ஆம் ஆத்மி பதிவிட்டுள்ள பதிவில், ”பா.ஜ.க வேட்பாளர் பிரவேஷ் வர்மாவின் அடியாட்கள், அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது கற்களால் தாக்கி, அவரை காயப்படுத்த முயன்றனர். இதனால் அவர் பிரசாரம் செய்ய முடியவில்லை. பாஜக மக்களே, உங்கள் கோழைத்தனமான தாக்குதலுக்கு கெஜ்ரிவால் பயப்படப் போவதில்லை, டெல்லி மக்கள் உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளது.
அதேபோல் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும், இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ளார். அவர், ”அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலுக்கு எதிராகப் போராட உங்களுக்குத் தைரியம் இல்லையென்றால், அவரைத் தாக்க உங்கள் அடியாட்களை வைத்துள்ளீர்கள். பாஜக செய்வதைவிட மலிவான மற்றும் கீழ்த்தரமான அரசியல் எதுவும் இருக்க முடியாது. பொதுமக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். இப்போது இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலைச் சொல்லுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பர்வேஷ் வர்மா, விளக்கம் அளித்துள்ளார். அவர், ”அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் பாஜக தொண்டர் மீது மோதியதில், அவருடைய கால் உடைந்தது. அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரிக்குச் செல்கிறேன். இது மிகவும் வெட்கக்கேடானது. உள்ளூர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் காரால் தாக்கியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், டெல்லி பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஒருவர் திரவத்தை வீசினார் . அப்போது, தாக்குதல் நடத்தியவருக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவுக் குழு தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்திருந்தன. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பாளரான கெஜ்ரிவாலை, பாதுகாக்கும் பொருட்டு அவருக்கு 75 பாதுகாவலர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜகவின் முன்னாள் எம்பி பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா போட்டியிடுகிறார். இவர், டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் ஆவார்.