இந்தியா

“காம்பீர் வெற்றி பெற்றால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?” - ஆம் ஆத்மி கேள்வி

“காம்பீர் வெற்றி பெற்றால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?” - ஆம் ஆத்மி கேள்வி

Rasus

கவுதம் காம்பீர் விநியோகித்த துண்டு பிரசுரத்தில், தன்னைப் பற்றி மிக மோசமாக அவதூறு பரப்பப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, 5 கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் இரண்டு கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் இறுதிகட்ட பரப்புரை சூடுபிடித்துள்ளது. கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான அதிஷி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் கவுதம் காம்பீர் விநியோகித்த துண்டு பிரசுரத்தில், தன்னைப் பற்றி மிக மோசமாக அவதூறு பரப்பப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார். கவுதம் காம்பீர் சார்பில் விநியோகம் செய்யப்பட்ட லட்சக்கணக்கான துண்டு பிரசுரத்தில், தன் ஒழுக்கப் பண்புகள் குறித்து மிகுந்த மோசமான வகையில் அவதூறு வார்த்தைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல் அந்த துண்டு பிரசுரத்தில் அதிஷிக்கும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கும் உறவு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே இதனை படித்து பார்த்த தான் இடிந்துபோய்விட்டதாக அதிஷி தெரிவித்துள்ளார். இத்தகைய எண்ணங்களுடன் கூடிய காம்பீர் வெற்றி பெற்றால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் எனவும் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் அதிஷி புகாருக்கு கவுதம் காம்பீர் சார்பில் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மணிஷ் சிசோடியா, கவுதம் காம்பீர் இத்தகைய தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவார் என்று தான் நினைக்கவில்லை. அதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரின் இத்தகைய செயல்கள், அதிஷி குறித்து தொகுதி மக்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் எனவும் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.