குர்பிரீத் பாசி கோகி எக்ஸ் தளம்
இந்தியா

பஞ்சாப்| துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ..

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குர்பிரீத் பாசி கோகி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

2022ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த குர்பிரீத் பாசி கோகி (58), லூதியானா (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் பஞ்சாப் முன்னாள் அமைச்சரும், சிட்டிங் எம்எல்ஏவுமான பாரத் பூஷன் ஆஷுவை 7500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த நிலையில், அவர் தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும், தலையில் குண்டுகாயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தயானந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது மரணத்தை ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் ஷரன்பால் சிங் மக்கர் மற்றும் போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். ஆனால், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ”எம்.எல்.ஏ பாசி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்செயலான துப்பாக்கிச் சூடு காரணமாக இறந்தாரா என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி செய்யும்” என கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் தெரிவித்துள்ளார்.

குர்பிரீத் பாசி கோகி

முன்னதாக, பஞ்சாபின் விதான் சபா சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் மற்றும் எம்.பி சந்த் பாபா பல்பீர் சிங் சீச்சேவால் ஆகியோரை லூதியானாவில் புத்த நுல்லாவின் தூய்மை இயக்கத்திற்காக குர்பிரீத் பாசி கோகி சந்தித்ததாகக் கூறப்படுகிறது. தவிர, அவர் இறப்பதற்கு முன், பிரச்சின் ஷீட்லா மாதா மந்திரையும் பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோயிலில் இருந்து வெள்ளியைத் திருடிய கொள்ளைக் கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆக, இந்தக் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.