Sanjay Singh
Sanjay Singh ANI
இந்தியா

ஆம் ஆத்மி எம்.பி. கைது: அமலாக்கத்துறை அதிரடி.. பின்னணி என்ன?

Prakash J

2021-22ஆம் ஆண்டிற்கான டெல்லி அரசாங்கத்தின் கலால் கொள்கையில் மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சில டீலர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி வலுவாக மறுத்தது. பின்னர் இந்த கொள்கை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி துணைநிலை ஆளுநர், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே டெல்லி முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதேகட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர். மாலை வரை சோதனை தொடர்ந்த சூழலில் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ’கடந்த ஒரு வருட காலமாக மதுபான முறைகேடு கொள்கை வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் சூழலில் இதுவரை எந்தவொரு ஆவணங்களும் அவர்களுக்கு கிடைக்கவில்லை எனவும், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது பாரதிய ஜனதா கட்சி விரக்தியின் அறிகுறிகள்’ எனவும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இதையும் படிக்க: ஆசிய விளையாட்டு: மீண்டும் தங்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா? - முதலில் வீசும் போது நடந்தது என்ன?