தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்த விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தையடுத்து, மத்திய அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், டெல்லியில் இருந்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு இன்று காலை பாராமதிக்கு விரைந்துள்ளது.
இந்தக் குழு விபத்துக்குள்ளான லியர்ஜெட் 45 விமானத்தின் கருப்புப் பெட்டியை (Black Box) மீட்டு, விபத்துக்கு முன் விமானிகளின் உரையாடல் மற்றும் விமானத்தின் தொழில்நுட்ப நிலை குறித்து ஆய்வு செய்யும். மேலும், விமானத்தை இயக்கிய VSR வென்ச்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து விமானத்தின் பராமரிப்புப் பதிவுகள், விமானிகளின் அனுபவம், தகுதிச் சான்றிதழ்கள் விமானம் தரையிறங்கும் போது நிலவிய வானிலை, ஓடுதளத்தின் நிலை மற்றும் விமானத்தின் என்ஜின்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டதா ஆகியவை குறித்தும் ஆய்வு நடத்தும்.
பெயரில் 'கருப்பு' என்று இருந்தாலும், உண்மையில் இது மிகப்பொலிவான ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். விபத்து நடந்த இடங்களில் இடிபாடுகளுக்கு இடையே இதை எளிதாகக் கண்டறியவே இந்த நிறம் பூசப்படுகிறது. இது விமானத்தின் வால் பகுதியில் பாதுகாப்பாகப் பொருத்தப்பட்டிருக்கும். விமானத்தின் செயல்பாடுகளைப் பதிவு செய்ய இதில் இரண்டு வெவ்வேறு கருவிகள் உள்ளன. ஒன்று, CVR எனப்படும் ’காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்.” இது, விமானி அறையில் நடக்கும் பேச்சுகள், தரைக்கட்டுப்பாட்டு அறை உடனான உரையாடல்கள் மற்றும் காக்பிட்டில் கேட்கும் எச்சரிக்கை ஒலிகளைப் பதிவு செய்யும்.
இரண்டாவது, FDR எனப்படும் ”பிளைட் டேட்டா ரெக்கார்டர்.” இது, விமானத்தின் வேகம், உயரம், எரிபொருள் அளவு, என்ஜின் செயல்பாடு மற்றும் காற்றின் திசை போன்ற 80-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் தரவுகளைப் பதிவு செய்யும். இதையடுத்து, விமானம் விபத்துக்குள்ளாகும் போது, புலனாய்வு அமைப்புகள் (AAIB, DGCA) இந்தக் கருவியை மீட்டு ஆய்வு செய்வார்கள்.
இந்தக் கருப்புப் பெட்டி விபத்துக்கான காரணத்தை எப்படிக் கண்டறிய உதவுகிறது என்றால், விபத்திற்கு சில வினாடிகளுக்கு முன் விமானிகள் பேசிய வார்த்தைகள், அவர்கள் விடுத்த அவசர கால அழைப்புகள் மூலம் அவர்களின் மனநிலை மற்றும் பதற்றத்தை அறியலாம். என்ஜின் செயலிழந்ததா, இறக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டதா அல்லது விமானம் ஓடுதளத்தை விட்டு ஏன் விலகியது போன்ற தொழில்நுட்ப உண்மைகளை FDR தரவுகள் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும். இதன்மூலம், விபத்து நடந்த அந்தத் தருணத்தில் ஒவ்வொரு மில்லி வினாடியிலும் விமானம் எப்படிச் செயல்பட்டது என்பதை மீண்டும் உருவாக்கி பார்க்க இது உதவும்.
விமானம் முழுவதும் எரிந்து சாம்பலானாலும், இந்தக் கருவி மட்டும் சிதைவடையாது. அதற்குக் காரணம், உறுதியான கட்டமைப்பு. இது அலுமினியம், சிலிகா மற்றும் டைட்டானியம் போன்ற அதீத வலிமை கொண்ட உலோகங்களால் ஆனது. வெப்பத் தாங்குதிறன், சுமார் 1100 ∘ C வெப்பத்தைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் வரை தாங்கும் வலிமை கொண்டது.
இது கடலில் விழுந்தாலும், 30 நாட்கள் வரை தொடர்ந்து சமிக்ஞைகளை (Ultrasound signals) அனுப்பித் தனது இருப்பிடத்தைத் தெரிவிக்கும். இந்தக் கருவியின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, அஜித் பவார் சென்ற விமானத்தில் உண்மையில் என்ன நடந்தது என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகும்.