ராஜஸ்தான் மாநிலத்தில் அல்காய்தா தலைவர் பின்லேடனின் பெயரில் ஆதார் அட்டை பெற முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
மண்டல் நகரில் இணையதளம் மூலம் ஆதார் அட்டைகளுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்து தரும் மையத்தை நடத்தி வருபவர் சதாம் ஹூசைன். இவர், அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட அல்காய்தா தலைவர் பின்லேடனின் பெயரில் ஆதார் அட்டையை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் பின்லேடனின் தெளிவற்ற புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த விண்ணப்பத்தில் இருந்த தகவல்களை பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள், போலீசார் உதவியுடன் சதாம் ஹூசைனை கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.