இந்தியா

வங்கியில் ஆதார் எண் சேர்க்கப்போறீங்களா..... இதப் படிங்க முதல்ல.....

வங்கியில் ஆதார் எண் சேர்க்கப்போறீங்களா..... இதப் படிங்க முதல்ல.....

webteam


வங்கியில் ஆதார் எண்ணை சேர்ப்பதாக கூறி வாடிக்கையாளர்களின் தகவல்களை வாங்கிக்கொண்டு பணத்தை கொள்ளையடிக்கும் நூதன மோசடிகள் அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

டெல்லியில் வசிக்கும் பொறியாளர் ஒருவரின் மொபைல் நம்பரை தெரிந்து கொண்ட மர்மநபர் ஒருவர், சரளமான ஆங்கிலத்தில் தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும், மத்திய அரசு அறிவித்தபடி வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா என சரி பார்க்க அழைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஆதார் எண் இணைக்கவில்லை என்று பொறியாளர் தெரிவித்ததை தொடர்ந்து, அவரின் வங்கி கணக்கு எண்ணை வாங்கிக்கொண்ட அவர், ஆதார் எண்ணையும் வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரின் டெபிட் கார்ட் நம்பரையும் அந்த மர்மநபர் கேட்டுள்ளார். இதற்கு பொறியாளர் மறுப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் மானியத்தொகை ஒன்று அவருக்கு கிடைத்திருப்பதாகவும் அதனை பெற டெபிட் கார்டின் நம்பர் மற்றும் அதற்கு பின் இருக்கும் சிசிவி நம்பரும் வங்கியில் அவர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி அவர் எண்களை கொடுத்த நிலையில், அடுத்த சில நொடிகளிலே 20 ஆயிரம் ரூபாய் பொறியாளரின் வங்கி கணக்கிலிருந்து குறைந்து விட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இதனைப் பார்த்தவுடன் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த அவர், சைபர் கிரைமில் இது தொடர்பாக புகார் அளித்தார். இதுதொடர்பாக விழிப்புணர்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சைபர் கிரைம் போலீசார், எந்த திட்டத்திற்காகவும்  வாடிக்கையாளர்களின் டெபிட் கார்ட், கிரேடிட் கார்ட் மற்றும் சிசிவி எண் ஆகியவற்றை அரசு கேட்காது என்றும் அவ்வாறு அரசின் பெயரை சொல்லி தொலைபேசியில் யாராவது கேட்டால் உடனே போலீசாரிடம் தகவல் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டை பயன்படுத்தி நாடு முழுவதும் பல மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.