சொத்துகளை வாங்க, விற்க ஆதார் எண் கட்டாயம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதார் திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே, சொத்துகள் தொடர்பான வழக்குகளைத் தீர்க்க ஆதார் எண் பேருதவியாக இருக்கும். ஆதாரில் கருவிழிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், சொத்துகளை வாங்குவது மற்றும் விற்பதில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது. அரசின் சமூகநலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்குகள் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பு மற்றும் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 18 மற்றும் 19 தேதிகளில் விசாரிக்கும் என அறிவித்தனர்.