நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள், அரசு சாரா தன்னார்வ அமைப்புகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
ஆதார் எண் அறிமுகம் செய்யப்பட்டபோது சமூக நலத்திட்டங்களுக்கு மட்டும் தான் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ஆதார் எண்ணை தற்போது மத்திய அரசு அனைத்திற்கும் கட்டாயமாக்கி வருகிறது. விமான நிலையத்தில் நுழைவதிலிருந்து சிலிண்டர் மானியம், வங்கிக் கணக்கு, பான் எண், செல்போன் எண், இறப்பு சான்றிதழ் உள்பட பலவற்றிற்கு ஆதார் எண் அவசியமாகியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள், அரசு சாரா தன்னார்வ அமைப்புகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம், ஆதார் எண் அடிப்படையிலேயே நிறுவனங்கள், அரசுசாரா அமைப்புகளின் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது கட்டாயமாகும் எனத் தெரிகிறது. இதன்மூலம், கறுப்புப் பண நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது. நிறுவனங்கள், அரசுசாரா அமைப்புகள் ரொக்கமாக 2 லட்ச ரூபாய் வரை மட்டுமே கையாள அனுமதிப்பது, நிறுவனங்களின் நிர்வாகிகள், இயக்குநர்கள், நிறுவனர்களின் ஆதார் எண்ணை நிறுவன பரிவர்த்தனைகளுடன் இணைப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.