ஆதார் அடையாள எண் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி, தொடரப்பட்ட வழக்குகளின் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அண் கட்டாயம் என்கிற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்கில், தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. கடந்த நான்கு மாதங்களில் 38 நாட்கள் நடைபெற்ற விரிவான விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே. கே. வேணுகோபால், மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், ப சிதம்பரம், ராகேஷ் திவேதி உள்ளிட்ட பலர் வழக்கின் பல்வேறு தரப்பினர் சார்பில் வாதங்களை முன்வைத்தனர். வாதங்களின்போது ஆதாருக்கு ஆதரவாக மத்திய அரசு பல்வேறு வாதங்களை முன்வைத்திருந்தது. ஆதாருடன் மொபைல் எண்களை இணைக்கும் முடிவு குறித்து விளக்கமளித்த மத்திய அரசு, மொபைல் போன் பயனாளர்களின் அடையாளத்தை உறுதி செய்யுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையே அரசு செயல்படுத்தியதாகவும் விளக்கமளித்தது. உச்சநீதிமன்ற உத்தரவை ஆதார் எண்ணை மொபைல் போனுடன் இணைப்பதை கட்டாயமாக்க பயன்படுத்திக் கொண்டதாகவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.