இந்தியா

13 அடி மதில் சுவர் பாதுகாப்பில் ஆதார் தகவல்கள்..!

13 அடி மதில் சுவர் பாதுகாப்பில் ஆதார் தகவல்கள்..!

webteam

ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இதனிடையே பொதுமக்களின் ஆதார் தகவல்கள் அடிக்கடி கசிந்து விடுவதாகவும் புகார் எழுந்தன. ஆனால் ஆதார் தகவல்கள் எல்லாம் 10 அடிக்கும் மேல் கொண்ட சுவரின் உட்புற அறையில் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதனை உறுதி செய்ய ஆங்கில நாளிதழ் ஒன்று ஆதார் தகவல்கள் பாதுகாக்கும் இடத்தை நேரடியாக ஆய்வு செய்ய கடந்த மார்ச் மாதம் புறப்பட்டது.

பாதுகாப்பில் ஆதார் தகவல்கள்..

ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்படும் இடம் ஹரியானா மாநிலம் மானேசரில் அமைந்துள்ளது. அங்கு அப்படி என்னதான் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக செய்தியாளர் அங்கே செல்ல முயன்றபோது சிஆர்பிஎஃப் வீரர்கள் அனுமதி இல்லை என மறுத்துவிட்டனர். இது தொடர்பாக இண்டியன் எக்ஸ்பிரஸ் தனி கட்டுரை ஒன்றை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. நேரடியாக அவர்களது செய்தியாளர் அங்கு சென்று செய்தி சேகரித்துள்ளார். அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தியாகியிடம் பேசிய போது, “இங்கு 159 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இன்-சார்ஜ் பொறுப்பில் நான்தான் இருக்கிறேன். மொத்தமாக 250 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அறைக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 4 விதமான ஷிப்டுகளில் பாதுகாப்பு பணியில் வீரர்கள் ஈடுகின்றனர். இதுதவிர இரண்டு தனியார் பாதுகாப்பு ஏஜென்சியை சேர்ந்த 22 வீரர்களும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த அறையை சுற்றி சுமார் 11 முதல் 13 அடி வரையிலான நீளம் கொண்ட மதிற்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதில் சுவார் சுமார் 5 அடி பரந்த தன்மையும் கொண்டிருக்கிறது. நிலநடுக்கம் போன்ற நேரங்களில் இந்தச் சுவர் தாங்கும் தன்மை உடையதாக உள்ளது. அறையை சுற்றிலும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றுபவர்களை தவிர சுத்தம் செய்தல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் 40 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் உள் நுழையும் போது கேட் பாஸ் வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படுவதால் யாரும் நுழைய முடியாது” என்றார்.

இங்கு முன்னாள் டிரைவராக பணியாற்றிய மேவாத் கூறும்போது எங்களுக்கு அதிகப்படியான வேலைகள் இருக்காது. எங்களுக்கு தேவையான இடங்களுக்கு தவிர மற்ற இடங்களுக்கு பாதுகாப்பு வீரர்கள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார். மதிலை சுற்றி ஏகப்பட்ட கேமராக்கள் உள்ளன. சுமார் 200 கேமராக்கள் இருக்கலாம்  என்றார். அங்கு வேலை செய்பவர்கள் தேநீர் இடைவெளிக்காக வந்தபோது ஆதார் தகவல் கசிகிறதா..? என அவர்களிடம் கேட்டதற்கு.. அலுவலகம் சார்ந்த விஷயங்கள் ரகசியமானது. அதைப்பற்றி கூறுவதற்கில்லை என தெரிவித்துவிட்டனர்.

இந்தக் கட்டுரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசின் குரலாகவே பேசியுள்ளனர். ஆனால் உண்மை நிலைமை என்ன? எவ்வாறு பாதுகாப்பு முறைகள் உள்ளன என்பதில் அரசு வெளிப்படை தன்மை கடைப்பிடித்தால் மட்டுமே ஆதார் மீதான மக்களின் சந்தேகங்களுக்கு ஒரு தீர்வு பிறக்கும்.