ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று மக்களவையில் ரயில்வே துறை இணை அமைச்சர் மந்திரி ராஜன் கோகாய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அதில், ‘ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்படமாட்டாது. கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அதை சரிபார்க்க ஆதார் பெறப்பட்டு வருகிறது. அதே நேரம், ஆதார் மற்றும் செல்போன் எண்ணை இணைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் தனிநபர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
குறிப்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி) இணையதளத்தின் வழியாக ஒவ்வொரு மாதமும் தனிநபர்கள் செய்யும் டிக்கெட் வரம்பு 12 டிக்கெட்டுகளாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதேபோல் ஐ.ஆர்.சி.டி.சி.யின் பயனாளர் குறியீட்டுடன் ஆதார் இணைப்பை பயன்படுத்தி டிக்கெட் எடுப்பவர்களுக்கு பரிசு அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.