இந்தியா

நேபாளம், பூடானுக்குச் செல்ல ஆதாரை அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது: மத்திய அரசு

webteam

நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்குச் செல்ல இந்தியர்கள் ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விசா இல்லாமல் இந்தியர்கள் நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கு பயணிக்கலாம். இந்த பயணத்துக்கான அடையாள ஆவணமாக பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்குப் பயணிக்க ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை பயணத்துக்கான ஆவணமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லையோர மாநிலங்களில் போலியாக ஆதார் அட்டை தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.