இந்தியா

சிம்கார்டு வாங்க ஆதார் தேவையில்லை - மத்திய அரசு

webteam

சிம்கார்டு வாங்க ஆதாரை கட்டாயம் சமர்ப்பிக்குமாறு கேட்க வேண்டாம் என சிம் நிறுவனங்களுக்கு, மத்திய தொலை தொடர்புத் துறை
உத்தரவிட்டுள்ளது.

சிம் கார்டு வாங்க ஆதாரை கட்டாயம் சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களை கேட்க வேண்டாம் என சிம் நிறுவனங்களுக்கு மத்திய
தொலை தொடர்புத்துறை வலியுறுத்தியுள்ளது. ஆதாருக்கு பதிலாக ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற மற்ற அடையாள
அட்டைகளின் நகலைப் பெற்றுக்கொண்டு சிம்கார்டு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் சிரமத்தை போக்க இந்த
உத்தரவை உடனே அமல்படுத்துமாறு, சிம் நிறுவனங்களிடம் வலியுறுத்தியுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் அருணா
செளந்தரராஜன் கூறியுள்ளார்.

சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சிம் கார்டு
நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் ஆதாரை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டு வருகிறது. இதனால் ஆதார் இல்லாத
வாடிக்கையாளர்கள் சிம் கார்டுகள் பெறமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்
நபர்கள் ஆதாரை பெற காலதாமதம் ஏற்படுவதால், அவர்கள் சிம் கார்டுகளை வாங்கமுடியாத நிலையில் இருக்கின்றனர். 

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடையச்
செய்துள்ளது. இந்நிலையில் சிம் நிறுவனங்களுக்கு இந்த உத்தரவை மத்திய தொலை தொடர்புத்துறை பிறப்பித்துள்ளது. இதனை
கடைபிடிக்காத நிறுவனங்கள் மற்றும் சிம் விற்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.