இந்தியா

ஆந்திராவில் 70 லட்சம் குழந்தைகளின் ஆதார் விவரங்கள் கசிவு ?

Rasus

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 70 லட்சம் குழந்தைகளின் விவரங்கள் அரசு இணையதளங்களில் கசிந்துள்ளது. இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

வங்கிக் கணக்கு, அரசின் மானியம் பெறுதல் போன்ற பல சேவைகளுக்கும் ஆதார் எண் அத்தியாவசியம் என்கிற நிலை உள்ளது. எனவே நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஆதார் சேவையை பெற்று வருகின்றனர். இதனிடையே ஆதார் விவரங்கள் அடிக்கடி கசிவதாகவும் புகார் எழுந்தது. ஆனால் ஒவ்வொறு முறையும் இந்த புகார் வரும்போது, இந்திய தனிச்சிறப்பான அடையாள அட்டை ஆணையம் – UIDAI (உதய்) ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என தொடர்ந்து கூறி வந்தது. 

இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் 70 லட்சம் குழந்தைகளின் ஆதார் விவரங்கள் அரசு இணையதளங்களில் கசிந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகள் பல லட்சம் மக்களின் ஆதார் விவரங்களை பயன்படுத்துவதாகவும், அரசு இணையதளங்களில் மக்களின் ஆதார் விவரங்கள் கசிந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. ஹைதராபாத்தை சேர்ந்த சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர், ஆந்திரபிரதேச மாநிலத்தில் 3 அரசாங்க இணையதளத்தில் 90 லட்சம் பெரியவர்களின் ஆதார் விவரங்களும், 70 லட்சம் குழந்தைகளின் ஆதார் விவரங்களும் கசிந்துள்ளதாக புகார் கூறியுள்ளார். கடந்த 7 நாட்களில் இந்த விவரங்கள் அனைத்தும் வெளியாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அண்மையில் ஜார்க்கண்ட் மாநில அரசாங்க இணையளதம் ஒன்றில், பென்சன் பெறும் 15 லட்சம் மக்களின் ஆதார் விவரங்கள் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.