ஏழை, எளிய மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் கட்டாயமாக தேவைப்படுவது இந்த ஆதார் எண். வங்கி கணக்கு தொடங்கி, கேஸ் இணைப்பு வரை இந்த ஆதார் எண் இணைப்பு மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களாக ஆதார் எனப்படும் தனி நபர் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க, யுஐடிஏஐ நிறுவனம் புதிய வசதியை கொண்டுவந்துள்ளது. இனி தனி நபரின் தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல் எந்த தொழில்நுட்பத்தாலும் திருட முடியாத அளவிற்கு பூட்டி வைக்கும் வசதி கொண்டு வந்துள்ளது, அந்நிறுவனம். சம்பந்தப்பட்டவரே தங்களுடைய தகவல்களை தற்காலிகமாக பூட்டி வைக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, யுஐடிஏஐ நிறுவனம் தகவல்.
எப்படி பூட்டி வைக்கலாம்?
1. முதலில் ஆன்லைனில், https://uidai.gov.in/-என்ற இணையதள முகவரிக்கு சென்று, My Adhaar- ஐ கிளிக் செய்ய வேண்டும்.
2. அதில் Adhaar Service-இன் கீழுள்ள Lock / Unlock Biometrics - என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. அதில் ஆதார் எண்ணையும், செக்யூரிட்டி கோட் எண்ணையும் பதிவிட வேண்டும்.
4. சிறிது நேரத்தில் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ‘OTP’எண் வரும்.
5. அந்த ‘OTP’எண்ணை சரியாக பதிவிட்டால், சம்பந்தபட்டவரின் ஆதார் விவரங்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டு, பாதுகாக்கப்படும்.
ஆதார் தகவல்கள் பூட்டப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவரே பையோமெட்ரிக் ரீடரில் தங்களது விரல்களை வைத்தாலும், அதை கணினி ஏற்காது.
அதை மீண்டும், மேற்சொன்னது போல செய்து Enable / Disable Biometric Lock - என்பதை கிளிக் செய்து ‘OTP’ எண்ணை சரியாக பதிவிட்டால் மட்டுமே சம்பந்தபட்டவரின் பையோமெட்ரிக் விவரங்கள் மீண்டும் திறக்கப்படும். அதன் பின் பயன்பாட்டுக்கு வரும். இதனை பயன்படுத்தி, தனி நபர் பற்றிய ஆதார் தகவல்கள் திருடப்படுவதிலிருந்து தற்காலிகமாக தவிர்க்கலாம்.