இந்தியா

பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு

பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு

webteam

ஆந்திராவில் பாம்புடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூர் பேட்டை மண்டலம் மங்கலபாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் சூலூர்பேட்டையில் நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று பாம்புடன் போட்டோ எடுக்க வேண்டும் என ஜெகதீஷ் கேட்டுள்ளார். அந்தப் பாம்பாட்டியும் ஜெகதீஷ் விரும்பியது போல் பாம்புடன் செல்ஃபி எடுப்பதற்காக, பாம்பை அவர் தோள் மீது போட்டார். பின்னர் பாம்பை பிடித்தபடி ஜெகதீஷ் செல்ஃபி எடுக்க முயன்றார். 

அப்போது திடீரென அவரை பாம்பு கடித்தது. இதனால் அந்த இடமே பரபரப்பானது. பாம்பு கடித்த நிலையில் சில நிமிடங்களில் ஜெகதீஷ் மயங்கி விழுந்தார்.  ஜெகதீஷை மீட்ட அவரது நண்பர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். செல்ஃபி மோகத்தால் விபரீத முடிவெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.